Politics

திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 26 மாதங்களில் சுமார் 20 காவல் நிலைய மர்ம மரணங்கள் – எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 26 மாதங்களில் சுமார் 20 காவல் நிலைய மர்ம மரணங்கள் – எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியில் 26 மாதங்களில் சுமார் 20 காவல் நிலைய மர்ம மரணங்கள் என அதிமுக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

மதுரை சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அப்பாவி வேடனின் காவல் நிலைய சந்தேக மரணத்துக்கு இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறமாட்டார்” என்ற சொலவடைக்கு கட்டியம் கூறுவது போல், தமிழகத்தில் காவல் துறைத் தலைவர்தான் மாறி இருக்கிறாரே தவிர,ஒருசில காவலர்களின் அராஜகப் போக்கு இன்னும் மாறவில்லை.காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஊழல் செய்து கைதாகும் தனது அமைச்சர்களைக் காப்பாற்றும் வேலையில்தான் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளாரே தவிர, தமிழக போலீசார் எப்படி பணியாற்றுகிறார்கள் என்றே கவனிப்பதில்லை போலும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதும், அவர்கள் மீது முறையாக வழக்கு தொடர்வதும்,
அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தருவதும், குற்றவாளிகளை திருத்துவதும்தான் போலீஸாரின் கடமை.
ஆனால், இந்த திமுக அரசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருசில காவலர்களே நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் அவலம் நடந்து வருகிறது.

இதுவரை சுமார் 20 பேர் காவல் நிலையங்களில் சந்தேகமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள். இவர்களுடைய மரணத்திற்கு போலீஸார்தான் காரணம் என்று அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது போல, உடல்நலக்குறைவால், நெஞ்சு வலியால் இறந்தார் என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் – உடல்நலக் குறைவால் மரணமடைந்ததாக காவல் துறையினர் மழுப்பிய சில மரணங்களின் விபரம் :

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தாண்டவன்குளத்தைச் சேர்ந்த சத்தியவாணன் நெஞ்செரிச்சலால் மரணம்; (24.8.2021)

முதுகுளத்தூர் நீர்கோழியேந்தல் – மணிகண்டன் உடல்நலக் குறைவால் மரணம்; (6.10.2021)

தருமபுரி, அரூர் வட்டம், கோட்டப்பட்டி – மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நலக் குறைவால் மரணம்; (12.1.2022)

திருநெல்வேலி, மேலப்பாளையம், ஆமீன்புரம் – சுலைமான் மயங்கி விழுந்து மரணம்; (5.2.2022)

சென்னை, பட்டினப்பாக்கம் விக்னேஷ் வலிப்பால் மரணம்; (10.4.2022)

திருவண்ணாமலை, தட்டரணை – தங்கமணி உடல்நலக் குறைவால் மரணம்; (26.4.2022)

சென்னை கொடுங்கையூர், அலமாதி முந்திரி தோப்பு – ராஜசேகர் மயங்கி விழுந்து மரணம்; (13.6.2022)

சென்னை, ஆலப்பாக்கம் பாபு உடல்நலக் குறைவால் மரணம் (15.12.2022)

தொடர்ந்து, 15.07.2023 அன்று, மதுரை மாவட்டம், எம். கல்லுப்பட்டி காவல் நிலைய போலீஸார் சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

விசாரணைக்குப் பிறகு அதிகாலை வீடு திரும்பியவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். போலீஸார் தாக்கியதால்தான் வேடன் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் காவல் துறையினரோ, அவர் நெஞ்சு வலி காரணமாக இறந்தார் என்று உடற்கூறாய்வு
மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாக சொல்கின்றனராம்.

மேலும், வேடனின் உடலைப் பெற மறுத்த அவரது உறவினர்களை, போலீஸார் வற்புறுத்தி எடுத்துச் செல்ல வைத்துள்ளனர்.

இந்நிகழ்வு, வேடனின் மரணத்தில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, இதுவரை சுமார் 20 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் வறட்டுக் கூச்சலிட்ட இன்றைய ஆட்சியாளர்கள் சுமார் 20 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ள போதும் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஒருசில சந்தேகத்திற்கிடமான காவல் நிலைய மரணங்களை- நெஞ்சு வலி மற்றும் நாள்பட்ட உடல் உபாதைகளால் இறந்துள்ளனர் என்றும்; கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் – விஷச் சாராயம் என்பதும்; டாஸ்மாக் சரக்கை குடித்து இறந்தால் – சயனைடு சாப்பிட்டு
தற்கொலை என்பதும், தற்போதைய காவல் துறை அதிகாரிகள் இன்றைய முதல்வரின் தந்தையைப் போல், திரைக்கதை வசனம் எழுத கற்றுக்கொண்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த ஆட்சியாளர்களின் அரட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிந்து செயல்படும் ஒருசில காவல் துறையினர் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இனியும் ஏற்க முடியாது. உயிரிழந்த வேடன் மீது எந்தவித வழக்கும், எந்தஒரு காவல் நிலையத்திலும் இல்லை என்று அவரது குடும்பத்தினரால் சொல்லப்படுகிறது.
என்ன காரணத்துக்காக வேடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பந்தப்பட்ட போலீஸார் கூறவில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அவரை, எதற்காக மறுநாள் அதிகாலைவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார் என்பது புரியவில்லை.

இந்த நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 26 மாதங்களில் சுமார் 20 காவல் நிலைய மர்ம மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
அப்பாவி வேடனின் காவல் நிலைய சந்தேக மரணத்துக்கு இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்க வேண்டும்.

இந்த மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேடன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *