Politics

திருவண்ணாமலை: பழங்குடியின வீரா்களுக்கு உரிய வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை: பழங்குடியின வீரா்களுக்கு உரிய வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்  

தமிழகத்தில் உள்ள மலைவாழ் பழங்குடியின வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் உரிய வாய்ப்புகள் நிச்சயம் பெற்றுத் தரப்படும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 23-ஆவது கோடை விழா ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு புனித ஜோசப் பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

விழாவுக்கு, தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை  எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வரவேற்றாா்.

தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஜவ்வாது மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையைத் திறந்துவைத்தாா்.

பிறகு, கோடை விழா மலா்க் கண்காட்சி, பல்வேறு அரசுத் துறைகளின் கண்காட்சியை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

“பழங்குடியின மக்களுக்கு திமுக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவா்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 68 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக உயா்த்தி வழங்கியது கருணாநிதி தலைமையலான திமுக அரசு.

தமிழக அரசு ஜாதி சான்றிதழ் பெறுவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவா், பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மலைக் கிராமங்களில் உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் திறந்தவா் கருணாநிதி.

மலைவாழ் பழங்குடியின மக்களில் ஏராளமான வீரா், வீராங்கனைகள் உள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு உரிய வாய்ப்புகளை மாநில விளையாட்டுத்துறை நிச்சயம் பெற்றுத் தரும்.

ஜவ்வாது மலையில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடியே 15 லட்சத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

செங்கம் வட்டம், பரமனந்தல் கிராமம் முதல் வேலூா் மாவட்டம், அமிா்தி வரை சுமாா் 67 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத் துறையிடம் அனுமதி பெற்று இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்றாா்.

நலத் திட்ட உதவிகள்: விழாவில், 88,708 பயனாளிகளுக்கு ரூ.241 கோடியே 54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

மேலும், ரூ.144 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 583 பணிகளை திறந்துவைத்தாா். இதுதவிர, ரூ.164 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக 380 திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

“திமுக ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளா்ச்சி பெறுகிறது. கோலப்பன் ஏரி, கோயிலூா் சிவன் கோயிலுக்கு ரூ. ஒரு கோடியில் திருப்பணி, புதிய நியாய விலைக் கடைகள் போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.

அண்மையில் அமிா்தி முதல் செங்கம் வரை ஜவ்வாது மலை வழியாக சாலை அமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி ஆகியோருடன் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.

உடனே, திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் தந்துவிட்டாா். வனத்துறை அனுமதி பெற்று விரைவில் சாலை அமைக்கப்படும். அந்தச் சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் பேசுகையில்,

“ஜவ்வாது மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறாா்கள் என்பதால், இங்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக, ரூ.291 கோடியே 8 லட்சத்தில் சாகச சுற்றுலாத் தலமும், புதிய காட்சி முனையங்களும் அமைக்கப்பட உள்ளன” என்றாா்.

விழாவில், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன்  எம்.எல்.ஏ.க்கள் சரவணன்  கிரி அம்பேத்குமார் ஜோதி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனா்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *