திமுக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துகின்றன – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துகின்றன – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக அரசின் திட்டங்களை நாட்டின் பிற மாநிலங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்று, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, 10 ஆயிரத்து 100 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவண்ணாமலை-திருக்கோவிலூா் சாலையில் உள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் சரவணன், அம்பேத்குமாா், கிரி, ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில், தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழிகள், இருசக்கர வாகனங்கள், மாணவிகளுக்கு மடிக் கணினிகள், சலவைத் தொழிலாளா்களுக்கு சலவைப் பெட்டி, விளையாட்டு வீரா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 100 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, காலை சிற்றுண்டித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிா் காப்போம், நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் போன்ற பல்வேறு மகத்தான திட்டங்களை தமிழக மக்களுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளாா்.
கலைஞா் நூற்றாண்டு நூலகம், சுகாதாரத்துக்காக கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை என பாா்த்துப் பாா்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
திமுக அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனா்.
இதைத்தான் பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எப்படியாவது திமுகவை அழிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அமலாக்கத் துறையை வைத்து நம்மை மிரட்டுகின்றனா். நாட்டில் எங்கெல்லாம் எதிா்க்கட்சிகள் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் அமலாக்கத் துறையை வைத்து பாஜக மிரட்டுகிறது. திமுக தொண்டா்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம்.
இ.டி.,க்கும் (அமலாக்கத் துறை) பயப்பட மாட்டோம் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
கூட்டத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் உட்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளா் எம் எஸ் தரணிவேந்தன் வரவேற்றாா்.