மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை வேண்டும் – குக்கி எம்எல்ஏக்கள்
மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை வேண்டும் – குக்கி எம்எல்ஏக்கள்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கிய வன்முறையில் இதுவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குக்கி பழங்குடி எம்எல்ஏக்கள் 10 பேர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி, ஜோ, நாகா (40%) உள்ளிட்ட பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக (53%) இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் (53%) இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது.
இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் அதிருப்பதியடைந்தனர்.
மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று விமர்சித்து இப்பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த மே 3ம் தேதி இந்த பழங்குடியின மக்களின் ஒற்றுமை பேரணி தொடங்கியது. இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்களும் பேரணி நடத்தினர்.
இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதே போல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் தங்கள் மக்கள் சந்தித்த இழப்புகள் குறித்து குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
அதில், “கடந்த மூன்று மாதங்களில் நடந்த வன்முறையில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதேபோல வீடியோவில் இருந்த பெண்களை தவிர்த்து மேலும் இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்திருக்கிறது. எனவே இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடத்த சிபிஐ வசம் இவ்வழக்கை ஒப்படைக்க வேண்டும்” என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த 10 எம்எல்ஏக்களில் 7 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.