17 மா.செ.,க்களை மாற்ற தி.மு.க., திட்டம்! அடிபணியாதவர்களுக்கு கவுரவ பதவி
17 மா.செ.,க்களை மாற்ற தி.மு.க., திட்டம்! அடிபணியாதவர்களுக்கு கவுரவ பதவி
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் அதிரடி நடவடிக்கையாக, 17 மாவட்டச் செயலாளர்களை மாற்ற, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
அதற்கு அடிபணியாத ‘சீனியர்’களை ஒதுக்கி வைக்கும் விதமாக, மண்டல பொறுப்பாளர் என்ற கவுரவ பதவிகளை வழங்கவும், முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் கட்சியில் அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. அவை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஐந்து அமைச்சர்கள், அவற்றுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அதாவது, அமைச்சர், மாவட்டச் செயலாளர் என, இரு பதவிகளில் இருப்போரிடமிருந்து, மா.செ., பதவி பறிக்கப்படுகிறது.
அதற்கு பதிலாக, அவர்களுக்கு பதவி உயர்வு என்ற பெயரில், மண்டல பொறுப்பாளராக கவுரவ பதவி வழங்கப்பட உள்ளது.
ஒரு சில மாவட்டங்களில், நான்கு முதல் ஆறு சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன. அதற்கு மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் ஒருவரே இருப்பதால், அவர்களால் கட்சி பணிகளையும், அரசு பணிகளையும் சரிவர செய்ய முடியவில்லை.
அது போன்றவர்களின் வசம் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 17 மாவட்டங்களில், மா.செ.,க்கள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், சில மாவட்டச் செயலாளர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்தார்;
பகிரங்கமாக எச்சரித்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கையை சரிவர முடிக்காதவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர் நியமன பணிகளில் சுணக்கம் காட்டியவர்கள், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை பெரியளவில் நடத்தாதவர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தராமல், மாவட்டச் செயலாளர் பந்தாவில் ஊர் சுற்றி வருபவர்கள் குறிப்பாக ஜாதி அடிப்படையில் செயல்படுபவர்கள் என, ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக உளவுத் துறை களமிறக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது
சர்ச்சைக்குரிய மாவட்டச் செயலாளர்களில் சிலர் களையெடுக்கப்படலாம் என்றும், சிலர் கடும் எச்சரிக்கைக்கு பின், பதவி நீட்டிப்பு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை, மத்திய அரசின் மாற்றத்தை எதிர் நோக்கும் கால கட்டம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் இணைந்த கூட்டணியில், அப்போது தான், தி.மு.க.,வுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் கருதுகிறார்.
அதற்கேற்ற நிர்வாகிகளை, கட்சியின் அனைத்து மட்டத்திலும் நியமிக்க, இப்பவே திட்டமிடுகிறார்.
பெரிய மாற்றம் கட்சியின் அடித்தளமாக விளங்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில், திறம்பட செயல்படக் கூடியவர்களை நியமித்தால் தான், அவர் எதிர்பார்க்கும் பெரிய மாற்றம், தேர்தலில் நிகழும். இதற்கிடையில், கட்சியில் மூத்தவர், அமைச்சர் என்ற தகுதிகள் காரணமாக, மாவட்டச் செயலாளர் பதவியையும் விடாமல் ஒட்டிக் கொண்டிருப்போரால், கட்சியில் நிறைய பிரச்னைகள் எழுகின்றன.
அவர்களிடம் உள்ள மாவட்டச் செயலாளர் பதவியை பெற்று, துடிப்பான இளைஞர் கையில் ஒப்படைத்தால், கட்சி நிர்வாகம் புத்துயிர் பெறும் என, முதல்வர் கருதுகிறார்.
மேலும், சரிவர செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதால், மற்றவர்கள் தங்களின் பதவியை தக்க வைக்க, லோக்சபா தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவர்.
வரும் தேர்தல்களில் ‘சீட்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையில், புதிதாக பொறுப்புக்கு வருபவர்கள், கட்சி பணிகளில் தீவிரமும், ஆர்வமும் காட்டுவர். கருணாநிதி காலத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் சிலர், மூத்தவர்களாக இருப்பதால், உதயநிதியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது போன்றவர்களுக்கு மண்டல பொறுப்பு வழங்கி, கவுரவமாக ஒதுக்கி விட்டு, உதயநிதி விரும்பும் நபர்கள், மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.