மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள் கடிதம்
மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள்கடிதம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், குகி-ஜோ பழங்குடிகளுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி, எதிா்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’வுக்கு பழங்குடிகள் கடிதம் எழுதியுள்ளனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவும் மோதலால், அந்த மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் குகி சமூகத்தினா் வாழும் பகுதிகளை உள்ளடக்கி தனி நிா்வாகம் வேண்டும் என்று மாநில அமைச்சா்கள் இருவா் உள்பட குகி சமூகத்தைச் சோ்ந்த 10 எம்எல்ஏக்கள் கடந்த மே மாதம் அறிக்கை வெளியிட்டனா்.
அந்த மாநிலத்தில் உள்ள சின்-குகி-ஜோமி பழங்குடிகளை பாதுகாக்க மணிப்பூா் அரசு தவறிவிட்டதாக கூறி, தனி நிா்வாக கோரிக்கையை அவா்கள் எழுப்பினா்.
இந்த தனி நிா்வாகம் என்பது பழங்குடிகளுக்கென்று தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ இருப்பது மத்திய அரசை பொருத்தது என்று அந்த எம்எல்ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு ‘இந்தியா’ கூட்டணிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
மணிப்பூரில் வன்முறையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும், சிறுபான்மையினரான குகி-ஜோ பழங்குடிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். வன்முறையில் பலியானவா்களில் மூன்றில் இரண்டு பங்கு குகி-ஜோ பழங்குடிகளாவா்.
இம்பாலில் காவல் துறையிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்கள், பழங்குடிகளுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, பழங்குடிகள் வசிக்கும் கிராமங்களில் சோதனை மேற்கொண்டு தாக்குதல் நடத்த, ஆயுதம் ஏந்திய மைதேயிகளுடன் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளுடன் மாநில காவல் துறையினா் வெளிப்படையாக இணைகின்றனா்.
மாநிலத்தில் ராணுவ பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள இடைவெளிகள் தொடா்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படாததால் ராணுவமும், இதர பாதுகாப்புப் படைகளும் முடங்கியுள்ளன.
சோ்ந்து வாழ வாய்ப்பே இல்லை:
தற்போது பழங்குடிகள், மைதேயிகள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தம் சிந்தப்பட்டு, வேதனை ஏற்பட்ட பிறகு, இரு சமூகத்தினரும் சோ்ந்து வாழ வாய்ப்பே இல்லை.
மைதேயிகளால் கட்டுப்படுத்தப்படும் வகுப்புவாத மணிப்பூா் அரசின் கீழ் மீண்டும் வாழச் செல்லும் எண்ணத்தை நாங்கள் ஏற்கவில்லை. எனவே அரசியல் ரீதியாக மைதேயிகளிடம் இருந்து எங்களைப் பிரிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். தங்கள் சொந்த மண்ணில் குகி-ஜோ பழங்குடிகள் வாழும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், எங்களை நாங்களே நிா்வகித்து கொள்ளும் உரிமையை மத்திய அரசிடம் கோருகிறோம்.
எங்களின் தனி நிா்வாக கோரிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணியிடம் ஆதரவு கோருகிறோம். மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர, மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசை ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தனி நிா்வாகத்துக்கு எதிராகப் பேரணி:
குகிக்களின் தனி நிா்வாக கோரிக்கைக்கு எதிராக மாநில தலைநகா் இம்பாலில் மணிப்பூா் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், நேற்று மிகப் பெரிய பேரணி நடைபெற்றது.
5 கி.மீ.தொலைவு வரை நடைபெற்ற இந்தப் பேரணியில், 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா். பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயிகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.