மசூதி எரிப்பு, இமாம் கொலை, மதக் கலவரம்… நீடிக்கும் 144 தடை உத்தரவு!
மசூதி எரிப்பு, இமாம் கொலை, மதக் கலவரம்… நீடிக்கும் 144 தடை உத்தரவு!
ஹரியானா மாநிலத்தில் விசுவ ஹிந்து பரிஷத் பேரணியில் தொடங்கிய வன்முறை வெறியாட்டம் காரணமாக அங்குள்ள மசூதி ஒன்று தீவைத்து எரிக்கப் பட்டு, அதன் உள்ளே இருந்த இமாம் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற பகுதியில் நேற்று முன் தினம் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் பேரணி நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மற்றொரு தரப்பினரின் வாகனங்கள், கடைகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. அதைத் தடுக்க முயன்ற ஊர்க்காவல் படை காவலர்கள் மூன்று பேர் பலியானார்கள்.
இந் நிலையில் இந்த வன்முறை பக்கத்து மாவட்டமான குருகிராமுக்கும் பரவியுள்ளது.
அதன் விளைவாக நேற்று அதிகாலை மத வெறியாட்ட கும்பல் மசூதி ஒன்றுக்குள் புகுந்து அதை தீ வைத்து எரித்ததுடன் இமாமையும் கொலை செய்துள்ள சம்பவம் அம்மாநில போலீஸாரால் நேற்று மாலை வெளியிடப் பட்டுள்ளது.
குருகிராம் பகுதியில் உள்ள மசூதிக்குள் நேற்று அதிகாலை நுழைந்த 80 பேர் கொண்ட கும்பல், அந்த மசூதிக்கு தீ வைத்து எரித்தது. அத்துடன் அதன் உள்ளே இருந்த மசூதி இமாமை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தது.
19 வயதான அந்த இமாமின் பெயர் ஹாஃவி சாத். பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் மனியாதிக் பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த 6 மாதங்களாக இந்த மசூதியில் இமாமாக வேலை செய்து வந்துள்ளார்
இந்த வன்முறை வெறியாட்டத்தில் அங்கிருந்த மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து காவல் ஆணையர் கலா ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் மசூதியை எரித்த வழக்கில் விரைந்து செயல்பட்டு இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஹரியானாவில் 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.