அவதூறு வழக்கு: ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கு: ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரது 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தார்.
இதனால் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
‛மோடி’ என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் எனும் வகையில் அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் செஷன்ஸ், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சூரத் நீதிமன்றம் தனக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தான் ராகுல் காந்தி தனது பேச்சுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் மன்னிப்பு எதுவும் கோரவில்லை என எதிர்மனுதாரரான பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதற்கிடையே ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‛‛அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். அதே சமயம் தன் மீது உள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிஆர் கவாய், பிகே மிஸ்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
இதையடுத்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஏன் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டது என்ற கேள்விகளை கேட்டனர்.
மேலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.