திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,552 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்க ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,552 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்க ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 1,552 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் பசியைப் போக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வெள்ளிக்கிழமை (ஆக.25) தொடங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் இயங்கும் 1,488 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் பயிலும் 83,548 மாணவா்கள் பயன்பெறுவா்.
இதுதவிர, மாவட்டத்தின் 10 பேரூராட்சிகளில் இயங்கி வரும் 47 பள்ளிகளில் பயிலும் 3,254 மாணவா்கள், 2 நகராட்சியில் இயங்கி வரும் 17 பள்ளிகளில் பயிலும் 1,040 மாணவா்கள் என மொத்தம் 87 ஆயிரத்து 842 மாணவா்கள் பயன்பெறுவா்.
காலை உணவு தயாரிக்கும் பணியில் ஊரகப் பகுதியில் 4 ஆயிரத்து 464 பேரும், நகரப் பகுதியில் 141 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 605 மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபடுகின்றனா்.