ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சியில் 7 விதமான ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாகை எம்.பி செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது
“நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறோம் என்றால், ஏதோ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலாக நினைத்துவிடக்கூடாது. ஆட்சிமாற்றத்துக்கான தேர்தல் என்றுகூட நினைத்துவிட வேண்டாம். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப் பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தை காப்பாற்றிவிட்டோம். இந்தியாவை காப்பாற்றக்கூடிய நிலைக்கு நாம் தற்போது வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்ற தற்போது இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.
பீஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் கூடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீஹாரில் நடத்தினோம்.
அதன் பின்னர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம்.
அதில்தான் இந்தியா என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு, அதை அறிவித்தோம். வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 2 நாட்கள் மும்பையில் 3 வது கூட்டம் நடைபெற உள்ளது.
அந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளோம்.
அந்த கூட்டத்திற்கு நானும் செல்கிறேன் 9 வருடமாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த 9 ஆண்டுகளில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இதை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் மக்களுக்கு இந்த நன்மைகளை செய்திருக்கிறோம் என்று எதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? தேர்தலுக்கு முன்பு வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் கூறினார். 15 ஆயிரம் கொடுத்தார்களா? ரூ. 15 கூட கொடுக்கவில்லை.
நாட்டில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால அது நடக்கவில்லை. வேலைகள் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதைவிடக் கொடுமை மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முடிவு கட்டவே இந்தியா கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம்.
தமிழகத்தில் ஊழல் வந்துவிட்டதாம், 9 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய ஊழலை ஒழித்தே தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் பிரதமரை பார்த்து கேட்டுக் கொள்வது, ஊழைப் பற்றி பேசக்கூடிய யோக்யதை உங்களுக்கு உண்டா? நீங்கள் செய்த ஊழல் எல்லாவற்றையும் சி.ஏ.ஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது. சி.ஏ.ஜி என்பது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு வருடமும் அரசின் வரவு செலவுகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு வழங்குவது சி.ஏ.ஜியின் பணி. ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி . முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
இதன்மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்எல்எம் விமான வடிவமைப்புத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம். இந்த 7 திட்டங்களில் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.
நிதியை கையாளுவதில் மோசடி நடந்துள்ளதாக சி.ஏ.ஜி மிக தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு பொய்யான மோசடி செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்ற நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர்.
ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீடு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளனர்” என்று ஸ்டாலின் பேசினர்.