வேளாங்கண்ணி பேராலய திருவிழா! 8 ம் தேதி நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வேளாங்கண்ணி பேராலய திருவிழா! 8 ம் தேதி நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளைய தினம் தேர்பவனியும் 8 ம் தேதி மாதாவின் பிறந்தநாள் விழாவும் நடைபெற உள்ளதால் 8ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. வங்கக்கடல் ஓரத்தில் ஆலயம் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.
மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ஆம்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும். அதன்படி ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை 7ஆம் தேதி தேர்பவனி நடைபெற உள்ளது. 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இந்த அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
நாளைய தினம் புனித ஆரோக்கிய மாதாவின் தேர் திருத்தலத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் பொழுது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு.
மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி வரும் 8 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் 7ஆம் தேதி இரவு தேர்பவனி, 8 ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஈடாக வரும் 23ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.