டெல்லி ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி எம்பி!
டெல்லி ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பயணிகளின் உடைமைகளை தூக்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிக் கொண்டே லாரியில் பயணம், திடீரென்று மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடல், கடலுக்குள் மீனவர்களுடன் சென்று மீன்பிடிப்பது, விவசாயிகளுடன் நாற்று நடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
தமிழகம் வந்த ராகுல், ஊட்டியில் தோடர் மக்களுடன் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினார்.
இதுபோன்று நாட்டின் பல்வேறு கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அவர்களின் வேலைகளை செய்து கொண்டே அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை காண வேண்டும் என்று டெல்லி ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை திடீரென்று ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் சென்ற ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அவர்களின் குறைகள், குடும்பச் சூழ்நிலை குறித்து ராகுல் கேட்டறிந்தார்.
அப்போது, அவர்கள் அணியும் சிவப்பு நிற சட்டை அணிந்து, கையில் பேட்ஜ் அணிந்து, பயணி ஒருவரின் சூட்கேஸை ராகுல் காந்தி சுமந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.
தொடர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து ராகுல் காந்தியுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.