நியூஸ் கிளிக் ரெய்டு: “நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படலாம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம்
நியூஸ் கிளிக் ரெய்டு: “நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படலாம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள்கடிதம்
புதுடெல்லி: நியூஸ் கிளிக் நிறுவனத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி அதன் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன. இவ்விவகாரத்தில் தலைமை நீதிபதியின் தலையீட்டை அவை கோரியுள்ளன.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (Press Club of India) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கடிதத்தை எழுதியுள்ளன.
அதில், நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்துடன் அழுத்தத்துடன் பணியாற்றுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் நீதித்துறை இதில் தலையிட்டு நாட்டில் அரசியல் சாசனம் இருக்கிறது அதற்கு அனைவருமே பதிலளிக்க உரியவர்கள்தான் என்பதை வலியுறுத்தி அதிகார அழுத்தத்தை எதிர்கொள்வது அவசியமாகியுள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதி நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திலும் அதற்கு தொடர்புடைய 46 ஊழியர்கள், நிபுணர்களின் வீடுகளில் நடந்த சோதனையை சுட்டிக்காட்டியுள்ள ஊடக சங்கங்கள், “ஊடகவியலாளர்களை இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்துவது. அதுவும், அரசாங்கம் சில தேசிய, சர்வதேச நிகழ்வுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பாத பட்சத்தில் அதைச் செய்ததற்காக கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகள் சுதந்திரத்துக்கு எதிரானது அல்லவா?
ஊடகவியலாளர்கள் சட்டத்துக்கு மீறியவர்கள் என்று சொல்லவில்லை. நாங்கள் அப்படி இருக்கவும் விரும்பவில்லை. ஆனால் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கூறுகிறோம்.
ஊடகவியலாளர்களாக நாங்கள் சட்டத்துக்கு உட்பட்ட எல்லா விசாரணைகளுக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு ஏவப்படும் விசாரணைகள், சோதனைகள், பொருட்கள் பறிமுதல்கள் ஏற்பதற்கு இல்லை. இது ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என்று நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். அப்படியிருக்க இத்தகைய செயல்கள் சரியானவை அல்ல” என்று தெரிவித்துள்ளன.
வழிகாட்டுதல் தேவை: எதிர்காலத்திலும் இதுபோல் பத்திரிகை நிறுவனங்களில் சோதனை நடக்கும்பட்சத்தில் பத்திரிகையாளர்கள் செல்போன், லேப்டாப் போன்ற உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் விசாரணை மேற்கொள்வதிலும் வழிகாட்டுதல் தேவை என்று ஊடக சங்கங்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.
நியூஸ் கிளிக் சோதனைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.