இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரம்: முதல்வரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது – தமிமுன் அன்சாரி
இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரம்: முதல்வரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது – தமிமுன் அன்சாரி
”இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம்”
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது ஏமாற்றம் அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேலும் கூறுகையில்,
“இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் பதில் அளித்து பேசினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அமைச்சரவையில் 161ஆவது சட்டப்பிரிவில் தீர்மானம் நிறைவேற்ற இதில் கோரினோம். இந்த அடிப்படையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, புரட்சி பாரதம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்துள்ளனர்.
முதலமைச்சர் ஒரு திறந்த மனதோடு பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 49 பெயர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்து அளித்துள்ளோம், கவர்னர் முடிவுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் சொல்லி உள்ளார்.
7 பேர் விடுதலையை அதிமுக அரசு அமைச்சரவை மூலம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை கொண்டு நீதிமன்றத்தில் வாதாடி விடுதலை பெற்றுள்ளனர்.
இதே போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை, ஆனால் ஒரு அரசு செய்ய வேண்டிய தார்மீக கடமையை தட்டிக்கழித்துவிட்டு, கவர்னர் பக்கம் பிரச்னையை மடைமாற்றுவது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது, முதலமைச்சரின் பதில் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம்” என கூறினார்