சென்னையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
சென்னையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்களும் அடங்குவர்
இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலை பல்வேறு நாடுகளும் கண்டித்து வரும் சூழலில் சில நாடுகள் இஸ்ரேலை ஆதரித்து வருகின்றன இந்தியாவை பொறுத்த அளவில் மத்திய அரசு இஸ்ரேலுடன் இருப்பதாக கூறினாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாலஸ்தீனம் பக்கம் இருப்பதாக கூறியுள்ளன.
தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
“பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியா ஆதரவை தொடர வேண்டும். மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலகநாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும்” என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, தெற்கு மாவட்டத் தலைவர் வழ.முகமது உசேன், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் புஷ்பராஜ், மேற்கு மாவட்டத் தலைவர் சீனி முகமது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அகமது, மேற்கு மாவட்டத் தலைவர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.