இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை இஸ்ரேலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை இஸ்ரேலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு லெபனான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்குள் நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு நாடுகளிலும் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 9000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல், காசா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது. இந்நிலையில், தொடக்கத்தில் ஹமாஸ் படையினரை கண்டித்த நாடுகள், வரைமுறையின்றி தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு தற்போது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உறுதிப்படுத்திய ராய்ட்டர்ஸ்
இந்த நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரில் லெபனானின் எல்லைப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் இஸ்ஸாம் அப்துல்லா ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் லெபனான் எல்லையில் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது நிறுவனத்தின் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தொடர்ச்சியான உதவிகளை வழங்க உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
லெபனான் பிரதமர் நஜிப் மிக்தாய், இஸ்ரேல்தான் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேலுக்கான ஐநா தூதர், இஸ்ரேல் ஒருபோதும் தெரிந்தே பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச்சூடோ அல்லது ஏவுகணை தாக்குதலோ ஒருபோதும் நடத்தாது. ஆனால் இங்கே போர் நடந்து கொண்டிருக்கிறது. போரில் பலர் கொல்லப்படுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.