காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள்: காஸா- எகிப்து ரஃபா எல்லை இன்று திறக்கப்பட்டுள்ளது
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள்: காஸா- எகிப்து ரஃபா எல்லை இன்று திறக்கப்பட்டுள்ளது
ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது.
மேலும், காஸாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் தற்போது காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும்பொருட்டு காஸா- எகிப்து இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை இன்று திறக்கப்பட்டுள்ளது.
கடந்த அக். 16 ஆம் தேதியே ரஃபா எல்லை திறக்கப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் தரப்பு மறுத்தது.
போரினால் காஸாவுக்கு வழங்கும் உணவு, நீர், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தியதால் காஸா மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மோசமான நிலையில் இருப்பதாகவும் மனிதாபிமான உதவிகள் வழங்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா. மற்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் போர் தொடங்கி 15 நாளில் ரஃபா எல்லை திறக்கப்பட்டு எகிப்து எல்லையில் காத்திருந்த மனிதாபிமான உதவிகள் அடங்கிய வாகனங்கள் காஸாவுக்குச் சென்றன. உணவு, மருந்துகளுடன் 7 லாரிகள் காஸாவுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போரில் இதுவரை 1,400 இஸ்ரேலியர்களும் 4,137 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .