பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ்? ஸ்டாலின் படத்தை அகற்றி மோடி படத்தை வைத்த தாக குற்றச்சாட்டு!
பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ்? ஸ்டாலின் படத்தை அகற்றி மோடி படத்தை வைத்ததாக குற்றச்சாட்டு!
சென்னை: பாஜக கொடிக்கம்ப வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது ஒரே நாளில் கூடுதலாக 2 வழக்குகள் பாய்ந்துள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மிக கடுமையாக விமர்சிக்கக் கூடியவர் அமர் பிரசாத் ரெட்டி. தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் பாதயாத்திரையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.
கொடி கம்பம் வழக்கில் கைது:
அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருபவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்மையில் சென்னை அருகே பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடுமுன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிகம்பத்தை அகற்றியதை எதிர்த்த போராட்டத்தில் அமர் பிரசாத் ரெட்டியும் கலந்து கொண்டார்.
அப்போது ஜேசிபி இயந்திரத்தை தாக்கியும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற தொடர் விடுமுறைகளால் உடனே பிணையில் வெளிவர முடியாத நிலையில் அமர் பிரசாத் ரெட்டி இருக்கிறார்
மேலும் 2 வழக்குகளில் கைது:
இந் நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 2 வழக்குகள் அமர் பிரசாத் ரெட்டி மீது பாய்ந்தது அந்த வழக்குகளிலும் சிறையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி அதில் பிரதமர் மோடி படத்தைஒட்டியதாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கு அமர் பிரசாத் ரெட்டி மீது பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும் தூசு தட்டப்பட்டு அதிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டி மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் சில மோசடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.
அத்தகைய வழக்குகளையும் சென்னை போலீசார் இனி கையிலெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி மீது சென்னை போலீசார் விரைவில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.