செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 22 வரை நீட்டிப்பு.. ஜாமீன் எப்போது?
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 22 வரை நீட்டிப்பு.. ஜாமீன் எப்போது?
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 வது முறையாக நீட்டித்துள்ளது.
5 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தீபாவளி நாளில் புழல் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.
இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 5மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.
இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றுடன் அவருடன் நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதனையடுத்து அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, நவம்பர் 22 ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
5 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது உடல் நிலையை காரணம் கூறி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் கடந்த அக்டோபர் 19ஆம் தள்ளுபடி செய்தது.
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார்.
அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆவதாக குறிப்பிட்ட அவர், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்ப்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிடப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் கால் மரத்து போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சனை இருந்து வருவதாக குறிப்பிட்டார். மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் காட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 20ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.