கனமழை; மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு
கனமழை; மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 14-ம் தேதி) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 14-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சிறிது தாமதமாக தொடங்கினாலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
இதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பர் 13-ம் தேதி முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் நவம்பர் 14-ம் தேதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த எச்சரிக்கையில் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம்,அரியலூர்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.